Search keywords

The apt keywords for this website are swami desikan, Krishna charitam, yaadhavaabhyudhayam, krishna history, yadhava's story, lord krishna, anjsanj, desikan's kaaviyam, vishnu puranam, hari vamsam, srimad baghavatham, yadhavabhudhayam, yadhavabudhaya, swamy desikan's yadhavabhudhayam ,ஸ்வாமி தேசிகன், கிருஷ்ண சரித்ரம், யாதவாப்யுதயம்



Friday, July 30, 2010

யாதவாப்யுதயம் (YAADAVAABHUDAYAM) - சர்க்கம் -1



யாதவாப்யுதயம் (ஸ்ரீ கிருஷ்ண சரித்ரம்)



யாதவாப்யுதயம்,-ஸ்ரீபாகவதம்,விஷ்ணு புராணம்,ஹரிவம்சம்,முதலிய புராண இதிகாசங்களை ஆதாரமாகக் கொண்டு கவிதார்க்கிக சிம்ஹம் என்று போற்றப்பட்ட ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகனால் இயற்றப்பட்டது. வேதாந்த தேசிகர் இயற்றிய மகத்தானதொரு காவியம் யாதவாப்யுதயம். இதில் 24 சர்க்கங்கள் உள்ளன।மொத்தம் 2642 ஸ்லோகங்கள்.இந்த காவியம் பல காவியங்களில் கையாளப்பட்ட முறைகளை மேற்கொண்டதோடு நிற்காமல் அத்புதமான பரிஷ்காரத்தைச் செய்துகாண்பிக்கிறது.சாஸ்திரீயமான அனுபவம்தான் ச்ரேஷ்டமானது.அதுதான் எற்றைக்கும் நிலைத்து நிற்கும். இந்த நிலையை ஒவ்வொரு ஸ்லோகத்திலும் காணலாம்..


யாதவாப்யுதயம்(முதல் ஸர்கம்)


ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ!


வேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி;


ஸ்ரீ யாதவாப்யுதயம் ஸர்கம் எண்:1


(காவ்யாரம்பம்,பூமி பிரார்த்தனா,தேவ ஸ்துதி: பகவத் தர்ஸனம்,பாஷணம்)




1. வந்தே ப்ருந்தாவநசரம் வல்லவீஜநவல்லபம்!


ஜயந்தீஸம்பவம் தாம வைஜயந்தீவிபூஷணம்!!


கோகுலாஷ்டமியில் தோன்றியவனும் ।வைஜயந்தி என்ற வனமாலையை அணிந்தவனும் பிருந்தாவனத்தில் சஞ்சாரம் செய்த இடைச்சிறுமிகளுக்கு வல்லபனாய் திகழ்ந்த சோதியான கண்ணனை வணங்குகிறேன்।




2. யத் ஏகைக குணப்ராந்தே ச்ராந்தா நிகமவந்திந;


யதாவத் வர்ணநே தஸ்ய கிமுதாந்யே மிதம்பசா:


யாருடைய குணங்களில் ஒவ்வொன்றிலும் ஒருசில பகுதிகளைச் சொல்வதிலேயே வேதங்களாகிய ஸ்துதிபாடகர்கள் ஓய்ந்து போய்விட்டனவோ அத்தகைய பெருமையுடையவனின் குணங்களை உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு சாதாரண மனிதர்களுக்கு எங்ஙனே இயலும்?




3. சக்த்யா ஸௌரிகதாஸ்வாத: ஸ்த்தாநே மந்ததியாமபி!


அம்ருதம் யதி லப்யேத கிம் ந க்ருஹ்யேத மாநவை:




மிதமான அறிவு பெற்றவர்களானாலும் தமது சக்திக்கு ஏற்ப கிருஷ்ணனுடைய கதைகளை அனுபவிப்பது உசிதம்தான்.அமுதம் கிடைக்குமேயானால் சாதாரணமானவர்கள் அதை பருகாமல் விட்டுவிடுவோமா என்ன?.




4. வஸுதாச்ரோத்ரஜே தஸ்மிந் வ்யாஸேச ஹ்ருதயே ஸ்திதே!



அந்யேபி கவய: காமம் பபூவு: அநபத்ரபா!!



புவியின் செவியில் பிறந்த வால்மீகியும்,வியாசரும் இதயத்திலேயே இருக்கும்போது பிறரும் கவிகளாகி விட்டார்களே! ஐயோ பாவம் என்ற நிலையன்றோ இவர்களுடையது.





5. ஸ கவி: கத்யதே ஸ்ரஷ்டா ரமதே யத்ர பாரதீ!


ரஸ பாவ குணீ பூதைர் அலங்காரைர் குணோதயை:




எங்கு பாரதி(சரஸ்வதி)விளையாடுகின்றாளோ அவன் அன்றோ கவி எனப்படுவான்?எத்தனை படைப்புகளைச் செய்கின்றான் அக்கவி! ரஸம்- பா(ba) அவைகளுக்கு ஏற்ற அலங்காரங்கள்,அற்புதமான குணப்பெருக்கங்கள்,இவைகளுடன் நிரம்பப் பெற்ற ஸரஸ்வதி விளையாடி மகிழ்விக்கின்றபோது அவன் பற்பல சிருஷ்டிகளைச் செய்து விடுகிறான்.




6. ததாத்வே நூதனம் ஸர்வம் ஆயத்யாம் ச புராதநம்


ந தோஷாயைதத் உபயம் ந குணாய ச கல்பதே!!




பழமையானவை என்பதால் ஒன்றிற்கு ஏற்றம் கிடைத்துவிடுவதில்லை. தோன்றிய நாளில் அவையும் புதியவையே.நாட்கள் கழியக்கழிய அவை பழமை பெற்றுவிடுகின்றன.புதுமை என்பது குற்றமோ,குறையோ ஆகாது.யதுவம்சம் தோன்றியபின் ராமாயணப்பெருமை குறையவில்லை.ஆதிகவி கூறாததை மஹாகவி கூறிவிட்டான் என்று யாரும் மோஹிப்பதில்லை. அதைப்பின்பற்றி வாழ்வு பெறும் காவியங்களே சிலாக்கியமானவை.




7. ப்ரவ்ருத்தாம் அநகேமார்கே ப்ரமாத்யந்தீமபி க்வசித்!


ந வாசம் அவமந்யந்தே நர்தகீமிவ பாவுகா:




மேடு பள்ளம் இல்லாத ஒரு மார்க்கத்தில் ஒரு நர்த்தகி ஆடுகின்றாள்.ரஸிகர்கள் ஆரவாரிக்கின்றனர். அப்பொழுது கதியில் ஒரு சிறு குறை ஏற்பட்டுவிட்டது.இருந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை.அதனால் அவள் நடனம் கற்கவில்லை என்று அவமதிப்பதில்லை. ஏதோ ஒரு சில இடங்களில் சப்தார்த்தகுணதோஷம் ஏற்பட்டாலும் bhaபாவ நோக்குடையவர்கள் கதியில் மதியை செலுத்துவதில்லை.




8. விஹாய ததஹம் வ்ரீடாம் வ்யாஸவேதார்ணவாம்ருதம்!


வக்ஷ்யே விபுதஜீவாதும் வஸுதேவ ஸுதோதயம்!!




ஆகவே நான் வெட்கத்தை விட்டுவிட்டேன். வியாசரின் வேதமாகிறது மஹாபாரதம். அது கடல் போன்றது. அதில் அமுதமாய் விளங்குவது வஸுதேவகுமாரனின் உதயம்.அது கவிகளுக்கும் தேவர்களுக்கும் உணவாகிறது.வாழ்க்கைக்கு மிகவும் போக்யமானது.அத்தகைய பிரபந்தத்தை நான் கூறப்போகிறேன்.




9. க்ரீடா தூலிகயா ஸ்வஸ்மிந் க்ருபாரூஷிதயா ஸ்வயம்!


ஏகோ விச்வமிதம் சித்ரம் விபு:ஸ்ரீமாந் அஜீஜநத்!!






ஸ்ரிய:பதி பெரிய பணக்காரன்.அவன் எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவன்.எங்கும் இருப்பவன்.தனக்கு நிகர் எவருமில்லாத தனிப்பட்டவன்.முதலில் தானே தன்னிடத்திலேயே ஒரு சித்திரம் தீட்டுகிறான்.சித்திரம் வரைவதற்கு எழுதுகோலும்,வர்ணமும் வேண்டும்.விளையாட்டு அவனுக்கு எழுதுகோல்.வர்ணம் அவனது கருணை.அவன் எழுதிய சித்திரம்தான் படைப்பு. அதுதான் இவ்வுலகம்.




10. ஜகத் ஆஹ்லாதனோ ஜக்ஞே மநஸஸ் தஸ்ய சந்த்ரமா:


பரிபாலயிதவ்யேஷு ப்ரஸாத இவ மூர்த்திமான்!!




உலகை மகிழ்விக்க சந்திரன் அவனுடைய மனதிலிருந்து உண்டானான்.தெளிவே உருவம் எடுத்துக்கொண்டதோ என்று சொல்லும் வகையில் அவன் அமைந்தான்.காப்பாற்றப்பட வேண்டியவர்களிடத்தில் காப்பாற்றுபவனுக்கு தேவையானது இன்முகம் காட்டலே என்பர்.




11. யத்பத்யஸமுத்பூத:புண்யகீர்த்தி:புரூரவா:


ஸதாம் ஆஹிதவந்ஹீநாம் விஹாரஸ்த்தேயதாம் யயௌ!!




யாருடைய குமாரனுக்கு குமாரன் தோன்றினானோ அவனும் புண்யகீத்தியானான்.(சந்திரனின் குமாரன் புதன்,புதனின் புத்திரன் புரூரவஸ்) அவன் மஹான்களாய் ஆஹிதாக்னிகளாய் இருப்பவர்க்கு பெரிய தைரியம்அளிப்பவனாக இருந்தான்.அக்னி நிர்ணயம் பண்ணுவதில் ஆதாரமாகவும், சாதகமாகவும் பலானுபவ ப்ராப்தியில் நிர்ணேதாகவும் விளங்கினான்.




12. ஸமவர்த்தத தத்வம்ஸ: உபர்யுபரி பர்வபி:


யஸோ முக்தாபலைர் யஸ்ய திசோ தச விபூஷிதா:




அவருடைய வம்சம் நன்றாக செழித்து வளர்ந்தது.படிப்படியாக ஏற்றம் பெற்று பரவலாயிற்று.ஒவ்வொருவரும் புகழை வளர்த்தனர்.முத்துக்களைப் போல புகழ் பெற்று பத்து திக்குகளிலும் அவற்றால் அலங்கரிக்கப் பெற்றன.




13. பபூவ நஹுஷஸ் தஸ்மிந் ஐராவத இவாம்புதௌ!


யமிந்த்ர விகமே தேவா:பதே தஸ்ய ந்யவீவிசந்!!




அத்தகையதொரு வம்சத்திலே பாற்கடலில் ஐராவதம் தோன்றியதைப்போல நஹுஷன் என்ற அரசன் தோன்றினான்.இந்திரனைக் காணாத தேவர்கள் இவனே தகுதி பெற்றவன் என்று தீர்மானித்து இந்திரனுடைய ஸ்தானத்தில் இவனை அமரச் செய்தார்கள்.




14. நரேந்த்ரா:ப்ருத்வீசக்ரே நாமசிந்ஹைர் அலங்க்ருதா:


ஜங்கமாஸ் தஸ்ய வீரஸ்ய ஜயஸ்தம்பா இவாபவந்!!




நஹுஷன் மிகவும் பராக்ரமுடையவன்.பூமண்டலத்தின் பல மன்னர்கள் பெயராலும் அடையாளங்களாலும் அலங்கரிக்கப் பெற்று அந்த வீரனின் நடமாடும் ஜயஸ்தம்பங்களோ என்று சொல்லும் வகையில் விளங்கினர்.




15. சக்திரப்ரதிகா தஸ்ய ஸாத்ரவைரபி துஷ்டுவே!


யதாவத் ஸாதகஸ்யேவ யாவதர்த்தா ஸரஸ்வதீ !!






அவனுடைய சக்தி தடங்கலற்றது.சேர்ந்தவர்கள் மட்டும் கொண்டாடப்படுவதன்று.சத்ருவாலும் போற்றப்பட்டது.சாதகனின்(சரஸ்வதி அருள் பெற்ற) வாக்கு எவ்வளவு பொருளுடையதோ அதுவும் எவ்வளவு பொருத்தமானதோ அவ்வளவு சிறந்ததாக இருந்தது.




16. வீரோ ரஸ இவோத்ஸாஹாத் நஹுஷாத் அப்யஜாயத!


யயாதிர் நாம யேநைந்த்ரம் அர்த்தாஸநம் அதிஷ்டிதம்!!




அந்த நகுஷனிடமிருந்து யயாதி தோன்றினான்.உத்ஸாஹத்திலிருந்து உண்டாகும் வீர ரஸமோ என்று சொல்லும் பாங்கினைப் பெற்றான்.இவன் வீர்யத்திற்கு வேறு எடுத்துக்காட்டு என்ன வேண்டும்?இந்திரனுடன் அவன் ஸிம்ஹாசனத்திலேயே ஏறி அமர்ந்து விட்டான்.




17. விசால விபுலோத்துங்கே யத்பாஹுசிகராந்தரே!


ஆஸீத் வீரச்ரியா ஸார்த்தம் பூமிரர்த்தாஸனே ஸ்திதா!!




யயாதியின் தோள்பட்டையானது விசாலமாயும் உயர்ந்ததாயும் விளங்கியது.அவனுடைய தோளில், வீரலக்ஷ்மியும்,பூமியும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.




18. நிதேசம் தஸ்ய ராஜாந:ந சேகுரதிவர்த்திதும்!


ப்ராப்த ஸ்வபர நிர்வாஹம் ப்ரமாணமிவ வாதிந:




அரசர்கள் யயாதியின் கட்டளையை மீறி நடக்க இயலாதவர்களாகவே ஆகிவிட்டனர். இது உண்மைதான்.வாதிகள் தம் பக்ஷத்திற்கும் பிறருடைய பக்ஷத்திற்கும் ஏற்றவாறு அமைந்துவிட்ட ப்ரமாண வாக்கியத்தை மீறி எதுவும் சொல்ல முடியாது. ஓய்ந்துவிடுவர்.




19. தடாகமிவ தாபார்த்தா:தமிந்த்ரமிவ நிர்ஜரா:


பாவா இவ ரஸம் பவ்யா:பார்த்திவா:பர்யுபாஸத!!




தாபத்தினால் வெதும்பியவர்கள் அழகான நீர் நிரம்பிய தடாகத்தை அடைந்து நீராடி தாபத்தைத் தணித்துக் கொள்வர்.தேவர்கள் இந்திரனைத் தமக்குப் புகலிடமாகக் கொண்டு தேவலோக இன்பத்தை அடைவர்.கருத்துக்கள் (பாவங்கள்) ரஸத்தை அடைந்து நிறைவுறும்.அதுபோலே பாரில் உள்ள மன்னர்கள் அனைவரும் யயாதியை அடைந்து வாழ்ந்தனர்.


20. யதுர் நாம ததோ ஜக்ஞே யத்ஸ்ந்ததி ஸமுத்பவை:


ஸமாநகணனாலேக்யே நிஸ்ஸமாநைர் நிஷத்யதே!!




யயாதியின் குமாரனாக யது என்பவன் தோன்றினான்.இந்த வம்சத்தில் உண்டானவர்கள் எல்லாருமே நிகரற்றவர்கள்.யார் யாருக்கு நிகர் என்றால் எல்லோருமே தனக்கு நிகர் ஒருவர் இல்லாதவர்களாகவே அமைந்து விட்டனர். சித்திரத்தில் தீட்டும்போதுதான் இது காணக்கிடைக்கிறது.




21. தேஹீதி வததாம் ப்ராய:ப்ரஸீதந் ப்ரத்யுவாச ஸ;


லலித த்வநிபி:லக்ஷ்மீ லீலாகமல ஷட்பதை:




யது தானவீரன்.யாசகன் யாசிக்கின்றபோதே அவன் தெளிவை அடைகிறான்.அதாவது அவன் பதிலே சொல்லவில்லை.அவன் கொடுத்த தானத்தினால் தானம் வாங்கினவன் வீட்டில் லக்ஷ்மி குடியேறிவிட்டாள்.அவள் கையில் தாமரைப்பூ. அதில் வண்டினம் முரல்கிறது.அந்த வண்டின் ஒலியே இவன் அளித்த பதிலாம்.




22. ஸ ச வ்ருத்தவிஹீநஸ்ய ந வித்யாம் பஹ்வமந்யத!


ந ஹி சுத்தேதி க்ருஹ்யேத சதுர்த்தீ சந்த்ர சந்த்ரிகா!!




யது ஆசார சீலமில்லாதவனின் கல்வியை ஏற்பதில்லை,சதுர்த்தீ சந்திரனின் நிலவு சுத்தமென்று யாரும் ஏற்பதில்லையே!




23. அபுந: ப்ரார்த்தநீயஸ்ய ப்ரார்த்திதாதிக தாயிந:


அர்த்திந: ப்ரதமே தஸ்ய சரமாந் பர்யபூரயந்!!


.


யதுவிடம் ஒருமுறை பிரார்த்தித்தால் போதும்.தான் வேண்டியதைக் காட்டிலும் வேண்டிய அளவில் அளித்துவிடுவான்.அவனிடம் யாசகம் பெற்றவர்கள் அவனிடம் பெற்ற செல்வத்தைக் கொண்டே தாங்களும் கொடையாளி ஆகிவிடுவார்கள்.எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு வேண்டியதை அளித்து பூர்த்தி செய்து வைத்துவிடுகின்றனர்.




24. ஸராணாம் ஸாத்ரவாணாஞ்ச ஸந்தாநே மஹௌஜஸ!


தஸ்ய நிர்தூத லக்ஷேண த்வி:க்வசித் நாப்யபூயத!!




அவன் மிகவும் ஓஜஸ்வியானவன்.பாணங்களை அவன் ப்ரயோகிப்பது ஒரு முறையே. அது குறி தவறியதில்லை.தானவீரன் என்பதால் அவன் சரங்களை வாரிவாரி விடுவதில்லை. ஒரு குறிக்கு ஒரே பாணம்தான்.சத்ருக்கள் அவனிடம் வந்தால் அவர்களை அழித்துவிடுவதில்லை. மாறாக அவர்களை அரவணைப்பதில் பின் தங்கியதில்லை. பாணங்களுக்கும் குறி தவறியதில்லை.ஸந்திக்கும் குறிப்பு தவறியதில்லை. ஆதலால் இருவிஷயங்களிலும் இரண்டாம் தரம் என்பதே இல்லாமல் போய்விட்டது.




25. யுக்ததண்டம் அமித்ராணாம் க்ருதாந்தம் ஸமவர்த்திநம்!


தக்ஷிணம் லோகபாலம் தம் அமந்யந்த திவௌகஸ:




அவன் லோகபாலனாகவே திகழ்ந்தான்.சத்ருக்களுக்கு அவன் யமனாகவே காட்சியளித்தான்.யமன் லோகபாலர்களில் ஒருவன். யுக்தமான தண்டனைவிதிப்பவன்.ஒரு முடிவு எடுத்தால் அதற்கு மாறுபாடு இல்லாதவன். வேறுபாடில்லாமல் சமமாக நடப்பவன்.இந்த அம்சங்களைக் கொண்டு அவனை லோகபாலனாகவே தேவர்கள் தீர்மானித்தவர்.




26. யஸ: ப்ரஸூநச்ஸுரபி: யதுஸந்தாந பாதப:


பபூவ விபுத ப்ரீத்யை பஹுஸாக: க்ஷமாதலே!!




யதுவின் சந்த்தியானது ஒரு அழகான தேவதருவான சந்தான வ்ருக்ஷமான கல்பதருவாகவே அமைந்தது. அந்த மரத்தில் புகழ் என்னும் மலர் பூத்து நறுமணம் வீசியது.இதைக்கண்டு தேவர்களும்,அறிவாளிகளும் ப்ரீதியை அடைந்தனர்.ஆனால் இந்த தேவதருவானது பூமியில்தான் பல கிளைகளை உடையதாகத் திகழ்கிறது.




27. வம்சே ஸமபவத் தஸ்ய வஸுதேவ: க்ஷிதீச்வர:


ஜநக: ப்ராக்பவே யோபூத் தேவதாநவ யூதயோ:




அத்தகைய யதுவின் வம்சத்தில் பூமியை ஆள்கின்ற மன்னனாக வசுதேவர் தோன்றினார்.இவர் யாரோவென எண்ணவேண்டாம். முற்பிறவியில் இவரே தேவர்களுக்குன் அசுரர்களுக்கும் தந்தையாக விளங்கினார்.




28. ஆநகாநாஞ்ச திவ்யாநாம் துந்துபீநாஞ்சநிஸ்வநை:


ஸஹஜாதம் யமாசக்யு: ஆக்யயாநக துந்துபிம்!!




திவ்யமான துந்துபிகள்,படஹ வாத்தியங்கள் இவர் பிறக்கும் சமயத்தில் முழங்கிய வண்ணம் இருந்தன. ஆகவே இவர் அநக துந்துபி என்றே அழைக்கப்பட்டார்.




29. தேந நிர்மலஸத்வேந விநிவ்ருத்த ரஜஸ்தமா:


ஜகதீ சாந்த மோஹேவ தர்மோச்ச்வாஸவதீ பபௌ!!




அத்தகைய வஸுதேவர் பிறந்தபொழுது பூமியானவள் நன்கு சோபித்தாள்.அவர் அப்பழுக்கற்ற ஸத்வகுணமுடையவர்.அவரைப் பெற்றபடியால் ரஜஸ்ஸும் தமஸும் நீங்கப் பெற்றாள். மோஹம்,மயக்கம் அற்றவளாய் தர்ம்மாகிற மூச்சு விடுபவளாய் பூமி ஆயிற்று.




30. ஸ விஷ்ணு: இவ லோகாநாம் தபநஸ் தேஜஸாமிவ!


ஸமுத்ர இவ ரத்நாநாம் ஸதாம் ஏகாச்ரயோபவத்.!!




உலகங்களுக்கெல்லாம் விஷ்ணுபோலவும்,தேஜஸ்ஸுகளுக்கெல்லாம் சூரியன் போலவும்,ரத்னங்களுக்கெல்லாம் கடல் போலவும் நல்லவர்களுக்கு ஒரே உறைவிடமாக இருந்தார்.




31. ப்ரக்யாத விபவே பத்ந்யௌ தஸ்ய பூர்வம் ப்ரஜாபதே:


ரோஹிணீ தேவகீ ரூபே மநுஷ்யத்வே பபூவது:




அவருக்கு இரு மனைவிகள். இவர்களின் பெருமைகளைச் சொல்ல இயலாது. முன் மன்வந்தரத்தில் கச்யபப்ரஜாபதியின் பத்னிகள். மநுஷ்ய ரூபத்தில் வரும்பொழுது ரோஹிணி தேவகிகளாக அவதரித்தனர்.




32. அக்ஷுத்ர கதி சாலிந்யோ:தயோர் அந்யோந்ய ஸக்தயோ:


ஐகரஸ்யமபூத் பத்யா கங்கா யமுநயோரிவ!!




அவர்கள் இருவரும் மட்டமான போக்கு இல்லாதவர்கள். ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்ந்தனர். வஸுதேவரை அடைந்த அவர்கள் அந்நியோன்னியமாய் வாழ்ந்தனர். கங்கையும், யமுனையும் இணைந்து ஒரே ரஸமாக விளங்குவது போன்றேயாயிற்று இவர்களின் ரஸமான வாழ்க்கை.




33. ஸ தாப்யாம் அநுரூபாப்யாம் ஸமநுஷ்யத் ஸமேயிவாந்!


வ்யக்திஹேதுர் அபூத்தேந ஸபர்யங்கஸ்ய சார்ங்கிண:




இவ்விரு மனைவியரையும் அநுரூபமாகப் பெற்று வஸுதேவர் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். மேலும் ஆதிசேஷனுடன் கூடிய சார்ங்கியான பகவானுடைய அவதாரத்திற்கு தோற்றத்திற்கு காரணமாக ஆனார்.




34. அலிப்ஸத ந ஸாம்ராஜ்யம் ஸோர்த்தகாமபராங்முக:


யத்ருச்சாகதம் ஐச்வர்யம் ஆந்ருண்யருசிர் அந்வபூத்!!




வஸுதேவர் மன்னர் ஆயினும் அவர் சாம்ராஜ்யத்தை விரும்பவில்லை.தனது முயற்சியில்லாமல் கிடைத்ததைக் கொண்டு அவர் வாழ்க்கை நடத்தினார்.தேவதைகளுக்குட்பட்ட கடனைக் கழிக்க அவர் யக்ஞம் செய்தார். பித்ருக்களுக்கு ஏற்பட்ட கடனைத் தொலைக்க முயற்சித்தார். அதற்காக விஹிதமான ப்ராப்தமான ஸுகங்களை அனுபவித்தார். இது உத்தமர்களின் லக்ஷணம்.




35. கயாசித் அசரீரிண்யா வாசா வ்யவஸிதாயதி:


தேவகீம் வஸுதேவஞ்ச கம்ஸ: காராம் அயோஜயத்!!




முன்பின் தெரியாத ஒரு அசரீரி வாக்கு உண்டாயிற்று. அதனைக் கேட்டான் கம்சன். தனது வருங்காலம் பாழாக இருப்பதை உணர்ந்து கொண்டான். தேவகி, வஸுதேவர் ஆகிய இருவரையும் சிறைக்கூடத்தில் அடைத்துவிட்டான்.




36. ஸ காலாதிபல: கம்ஸ: காலநேமிர் அநேஹஸா!


ஸர்வ தைதேய ஸத்வாநாம் ஸமாஹார இவோதித:




கம்ஸன் நமனைக் காட்டிலும் விஞ்சிய பலத்தை உடையவன். முன் பிறவியில் காலநேமியாயிருந்தவன் தானே இப்போது கம்சனாக இருக்கிறான். உலகில் உள்ள அஸுரபலமெல்லாம் இணைந்து கம்ஸ வடிவத்தில் உள்ளது போல் இருந்தான்.




37. ஏதஸ்மிந் நந்தரே தேவீ மேருமத்யமுபேயுஷ:


ப்ராஜபதிமுகாந் தேவாந் ப்ராஹ ஸாகர மேகலா!!




இவ்வாறிருக்க பூமாதேவி மேருமலையின் மத்தியில் இருக்கும் பிரமன் முதலான தேவர்களைக் கண்டு இவ்வாறு கூறினாள்.




38. விதிதம் பவதாம் தேவா: விச்வரூபேண விஷ்ணுநா!


மஹீயாந் தர்மசீலேஷு பாரோ யத்தந்நிவேசித:




விச்வரூபியான விஷ்ணுவினால் தர்மசீலர்களிடத்தில் பெரிய பாரம் வைக்கப்பட்டுள்ளது என்பதனை தேவர்களாகிய நீங்கள் அனைவரும் அறிவீர்.




39. அதர்ம நிக்நைர் அதுநா தர்மஸேது விபேதகை:

அஸங்க்யைர் அத்புதைஸ் துங்கை: க்ரம்யே ராக்ஷஸ பர்வதை:



அதர்மத்திற்கு ஆட்பட்டு, தர்ம மரியாதைகளையே சின்னாபின்னமாக்கி, கணக்கேயில்லாத அத்புதமான உயர்ந்த்தான ராக்ஷஸ பர்வதங்களாலே நான் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளேன்.




40. அத ஆலோசித ஜகத்திதை: ஸுரகணை: ஸ்வயம்!


ந பதாமி ந பித்யே ச யதாஹம் க்ரியதாம் ததா!!




உலகுக்கு நன்மை ஏற்பட வேண்டும். அதற்காக தேவர்கள் குழாம் குழாமாகக் கூடி தாமே யோசிக்கத் தொடங்கிவிட்டனர். நான் பிளக்கப் பெற்று சிதறிப் போகாமலும் விழுந்து மடியாமலும் இருக்கும் வண்ணம் ஏதாகிலும் நீர்தான் செய்தருள வேண்டும் என்று பூமியானவள் பிரார்த்தித்தாள்.




41. இதி தே பூததாரிண்யா நிஸ்ருஷ்டார்த்தா திவௌகஸ:


அவிதுஸ் தத்ப்ரியஸ்யைவ தத்பாரஹரணம் க்ஷமம்.!!




இவ்வண்ணம் பூமாதேவியால் வேண்டிக்கொள்ளப்பட்ட தேவர்கள் யோசித்தனர். அவளுடைய பாரத்தினைப் போக்குவது நம்மால் ஆவதில்லை. அவளுடைய ப்ரிய பர்த்தாவினால்தான் அது இயலும் என்று தீர்மானித்தனர்.




42. புரஸ்க்ருத்ய ஜகத்தாத்ரீம் மனஸோபி புரஸ்ஸரா:


துக்தோத் அதிசயம் தேவம் தூரமேத்யாபி துஷ்டுவு:




நலிவுற்ற பூமாதேவி முன்னே செல்ல, மனஸ்ஸைக் காட்டிலும் வேகமாக முன் செல்பவர்களாய் திருப்பாற்கடலில் நன்றே சயனித்திருக்கும் தேவனை வெகுதூரத்தில் நின்ற வண்ணம் துதிக்கலாயினர்.




43. த்ரிவேதீ மத்யதீப்தாய த்ரிதாம்நே பஞ்சஹேதயே!


வரதாய நமஸ்துப்யம் பாஹ்யாந்தர ஹவிர்புஜே!!




த்ரிவேதி மத்தியில் விளங்குபவனும் மூன்று இடங்களை இருப்பிடமாகப் பெற்றவனும், ஐந்து ஆயுதங்களைக் கரங்களில் கொண்டவனும் உள்ளும் புறமுமாக அமையும் ஹவிர்பாகத்தை நன்றே உண்பவனும் வரதனுமான உனக்கு எங்கள் வணக்கம்.




44. அநந்யாதீந மஹிமா ஸ்வாதீநபரவைபவ:


தயாதீந விஹாரஸ் த்வம் ப்ரணதாந் பரிபாஹி ந:




பிறரை நாடி நின்றே பெருமை பெற வேண்டிய சாதாரண நிலையில்லாதவனும், பிறருடைய வைபவதுக்கெல்லாம் தானே காரணமாயிருப்பவனும், தயைக்கு உட்பட்டு விளையாட்டை செய்பவனுமான நீ சரணாகதர்களான எம்மை நன்றே காத்தருளுகின்றாய்.




45. ஸ பவாந் குண ரத்நௌகை: தீப்யமாநோ தயாம்புதி:


தநோதி வ்யூஹ நிவஹை: தரங்கைர் இவ தாண்டவம் !!




அத்தகைய தேவரீர் குணங்கள் நிரம்பப் பெற்றவர். குணங்களும் ரத்தினங்கள்போல் ஜ்வலிப்பவை. தயா சமுத்ரன். உன்னிடம் உண்டாகும் வ்யூஹங்களே அலைகள்போல் எழும்பும். இதை பார்க்கின்றபொழுது நீர் ஒரு திவ்யமான தாண்டவத்தையே செய்து வருகிறீர் என்று தோன்றுகிறது.




46. த்வதேக வ்யஞ்ஜிதைர் ஆதௌ த்வதந்யேஷ்வநிதம்பரை: நிகமைரநிகம்யம் த்வாம் க: பரிச்சேத்தும் அர்ஹதி!!




வேதங்கள் உன்னாலயே முதலில் தோற்றுவிக்கப்பட்டன. அதற்கு பல ப்ரமாணங்கள் இருந்தாலும் முதலில் அப்படியப்படியே தோற்றிவித்தவன் நீ. அத்தகைய நியமங்களாலேயே உன்னை அறிய முடியவில்லை என்றால் யார்தான் உன்னை வரையறுத்துச் சொல்ல முடியும்?




47. அமிதஸ்ய மஹிம்நஸ்தே ப்ரயாதும் பாரம் இச்சதாம்


விததா வேத பாந்தாநாம் யத்ர ஸாயங்க்ருதா கதி:




நீ எதற்கும் கட்டுக்கடங்காதவன். உனது மஹிமையை பூராவும் சொல்ல வேண்டும் என்று எண்ணுவது மிகவும் கேவலமானது. மஹிமையை சொல்ல வேதங்கள் முற்படுகின்றன. சொல்லிக் கொண்டே போகின்றன. யாத்திரிகன் மாலை வேளையில் ஒரிடத்தில் தங்கிவிடுவான். மேலே செல்ல இயலாது. எங்கே இருட்டுகிறதோ அங்கேயே தங்கி விடுவான். மஹிமையின் அக்கரையைத் தாண்டிவிடுவேன் என்பது அஸ்தமிக்கிறவரை ப்ரயாணம் செய்து அங்கேயே தங்கிவிடுவேன் என்பது போன்றதாகும்.




48. நம்யஸ்ய நமத: க்ஷுத்ராந் வரதஸ்ய வரார்த்திந:


பத்ரை: பித்ருமத: க்ரீடா கதம் தே கேந வர்ண்யதே!!




இவனுடைய லீலைகள் விசித்திரமாக உள்ளது. உலகெலாம் வணங்கும் நீ ஒரு சிலரை வணங்குகிறாய். உலகுக்கெல்லாம் வரத்தை அளிக்கும் நீ சாதாரண ப்ரம்ஹாதிகளிடம் வரம் கேட்கிறாய். உனது பிள்ளை பிரமன். அவனுடைய பிள்ளை ருத்திரன். இவ்வாறிருக்க, அத்தகைய ஒரு சிலரைத் தகப்பனாராகச் செய்து கொள்கிறாய். உன் விளையாட்டை என்ன என்று சொல்வது. யாரால் தான் சொல்ல இயலும்.




49. நடவத் பூமிகாபேதை: நாத தீவ்யந் ப்ருதக்விதை:


பும்ஸாம் அநந்ய பாவாநாம் புஷ்ணாஸி ரஸம் அத்புதம்!!




நடிப்பவன் பல வேஷங்களை ஏற்று நடிக்கிறான். நீயோ அத்புதமான பல வேஷங்களைப் போடுகிறாய். எந்த வேஷமாக இருந்தாலும் பொருத்தமானதாகவும் ஜாஜ்வல்யமானதாகவும் அமைகிறது. இத்தனைக்கும் நீ நாதன். உன் விளையாட்டு இது என்றால் யாரால் கேட்க இயலும். ஆனால் உன்னையே கண்ணிலும் கருத்திலும் கொண்ட ரசிகர் மன்றத்திற்கு அத்புதமான ரஸத்தை ஏற்படுத்தி மகிழச் செய்கிறாய்!




50. ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த விசித்ராங்குர சாலிநாம்!


ஸலிலம் கர்ம கந்தாநாம் க்ரீடைவ தவ கேவலம்!!




பிரமன் முதலாகவும் கோரைப்புல் முடிவாகவும் உள்ளது இந்த பிரபஞ்சம். இந்த பிரபஞ்சம் எனும் முளைக்கு மூலமானது கர்மமெனும் கிழங்கு. அது செழித்து முளைவிட்டு வளர உமது விளையாட்டு என்பதே நீராகும்.




51.நிராதார நிஜஸ்தேம்ந: நிருபாதிக ஸேஷிண:


நிரபேக்ஷ நியந்துஸ்தே நிஸ்ஸமாப்யதிகா குணா:




மற்றொருவரை அண்டாத தன்னுடைய நிலையை உடையவர். ஸ்வாபாவிகமாகவே சேஷியாய் விளங்குபவர். ஸ்வதந்திரமாகவே நியமனம் செய்பவர். அத்தகைய குணங்கள் ஈடு இணையில்லாதவை.




52. அநாவிலதியாம் அந்தஸ் சிந்தாமணிரிவ ஸ்புரந்!


திசஸ்யபிமதம் ஸர்வம் அதிரஸ்கார்யதீதிதி:




கலக்கமில்லாத ஞானமுடையவர்களின் இதயத்தில் நீ சிந்தாமணி போல விளங்குகிறாய். உனது ஒளியோ யாராலும் ஒழிக்க ஒழியாதது.ஆதலால் அத்தகைய ஞானிகளின் அபிமதமானது அனைத்தையும் அளித்து வருகிறாய்.




53. ஸம்ஸார மரு காந்தாரே பரிச்ராந்தஸ்ய தேஹின: த்வத் பக்த்யம்ருதவாஹின்யான் ஆதிஷ்டம் அவகாஹநம்.!!




ஸம்ஸாரம் என்பது பெரியதொரு பாலைவனம். இதில் ஜீவன் பரிச்ரமப்படுகிறான். உனது பக்தியாகிற அமுதவாற்றின் பெருக்கினால் அதில் அவன் அவகாஹனம் பண்ணுவான். (இங்கு பக்தி வெள்ளம் அமுதனை நம்மிடம் சுமந்து வருகிறது என்ற ரஸமான பொருளை உணரலாம்.




54. துரிதோதந்வதாவர்த்தே கூர்ணமாநஸ்ய துக்யத:


ஸமக்ரகுணஸம்பந்ந: தாரகஸ் த்வம் ப்லவோ மஹாந்!!




தீவினைகள் என்பவை வற்றாத கடலாகிவிடுகின்றன. மேலும் அதில் பல சுழல்கள். சூழல்கள். இதில் ஆட்பட்டு தவிக்கிறான் ஜீவன். தத்தளிக்கிறான். துக்கம் தவிர வேறெதையும் அறியான். குணங்கள் பல கொண்ட நீதான் தாண்டிவைக்கும் பெரியதொரு படகாக இருந்து அனைவரையும் கரை சேர்ப்பிப்பவன்.




55. அபரிச்சித்யமாநஸ்ய தேசகாலாதிபிஸ்தவ!


நிதர்சனம் த்வமேவைக: த்வதந்யத் வ்யதிரேகத:




தேசத்தினாலோ காலத்தினாலோ அளவிட முடியாத உனக்கு நீதான் உதாரணம். உன்னைத் தவிர மற்றவை, அவை நீ போல் இல்லை எனக் காட்டவே!




56. அகர்த்தும் அகிலம் கர்த்தும் அந்யதாகர்த்துமப்யலம்


ஸங்கல்ப ஸ சிவ: காலே சக்தி லேச: ஸ தாவக:




எதையும் செய்யாமல் இருக்கவோ,அல்லது எதையும் செய்யவோ அல்லது மாற்றிச் செய்யவோ உனக்குத்தான் சக்தி உண்டு. உன்னுடைய சங்கல்பம் தான் அதற்கு மந்திரி போல. சக்தியின் துளியிருப்பினும் அது செய்யும்பாடு சொல்ல இயலாது.




57. யந்மூலம் அகிலம் கார்யம் யதமூலம் அதீமஹே


லக்ஷ்யம் ததஸி யோகாநாம் லக்ஷ்மீ கௌஸ்துப லக்ஷணம்.!!




உலகம் எல்லாம் எதனால் ஏற்பட்டதோ.அதாவது உலகமனைத்துக்கும் காரணப்பொருள் எதுவோ எது,தனக்கு ஒரு மூலப்பொருள் பெற்றதில்லையோ,எது யோகிகளுக்கு தோற்றமளிக்கிறதோ,எது லக்ஷ்மியையும்,கௌஸ்துப மணியையும் தனக்கு அடையாளமாக பெற்றதோ அதுதானே நீ!!




58. த்ரிவர்கம் அபவர்கம் வா ப்ரதிலப்தும் ப்ரயஸ்யதாம்!


ப்ரலயேஷ்வபி தீர்க்காயு: ப்ரதிபூஸ் த்வத் அநுக்ரஹ:




தர்மம்,அர்த்தம் காமம் என்ற த்ரிவர்க்கங்களையும், அல்லது அபவர்கம் எனப்படும் மோக்ஷத்தையும் அடைய ஆசைப்படுபவர்களுக்கும் முயற்சி செய்வோருக்கும் உனது அனுக்ரஹம் மட்டும் ப்ரளய காலத்திலும் அழிவதில்லை. அவ்வளவு தீர்க்காயுஸாக இருந்து உத்தரவாதம் அளிக்கிறது.




59.யத் ஏகம் அக்ஷரம் ப்ரம்ஹ ஸர்வாம்நாயஸமந்விதம்


தாரகம் ஸர்வஜந்தூநாம் தத் த்வம் தவ ச வாசகம்!!




ஒரு எழுத்துதான் எல்லா வேதங்களோடும் இணைந்து வாழ்கிறது. அந்த அக்ஷரம்தான் பெரியது. ஸர்வ ஜந்துக்களையும் அக்கரையில் சேர்த்து வைப்பது. அந்த அக்ஷரம் நீதான். உன்னைதான் அது உரைக்கிறது.ஓம் என்பதே அந்த அக்ஷரம். அந்த அக்ஷரமே ப்ரஹ்மம் எனப் பெற்றது. அது நீதான்.




60. த்வதாலம்பித ஹஸ்தாநாம் பவாத் உந்மஜ்ஜதாம் ஸதாம்


மஜ்ஜத: பாபஜாதஸ்ய நாஸ்தி ஹஸ்தாவலம்பநம்!!




ஸம்ஸாரத்திலிருந்து கொண்டே மூழ்கிப்போகும் ஸத்துக்கள் உன்னைத் தமது கரங்களாலே நன்றாகப் பிடித்துக் கொண்டு விடுவர். அவர்களின் பாபங்கள் மூழ்க ஆரம்பித்துவிடுகின்றன. அவைகளுக்கு கைகொடுத்து தூக்கி விடுவாரில்லை.




61. அநந்யரக்ஷாவ்ரதிநம் சாதகவ்ரதசாரிண:


பவந்தம் அவலம்பந்தே நிராலம்பந பாவநம்!!




தன்னை அடைந்தவர்களை ரக்ஷிப்பதையே வ்ரதமாகக் கொண்டவன் நீ!. ஆனால் இந்த வ்ரதத்தில் விசேஷம் உண்டு. என்னையே குலமகள் போல் தஞ்சமாகப் பற்றினவர்களுடைய யோக க்ஷேமங்களை வஹிப்பதே எனது வ்ரதம் என்றான். இத்தகைய வ்ரதமுடையவன் தன்மையறிவார் இவனையன்றி பிறரை பற்றுவதில்லை. இதற்கு சாதக விரதம் என்று பெயர். இங்கு ஸ்வாமி ப்ரயோகிப்பது ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் பிரமன் துதியில் காணுவது.




62. அநிதம்பூர்வநித்ராணாம் அநஸ்தமயபாநுமாந்!


ஆபாதயஸி பும்ஸாம் த்வம் அபுநஸ்வாப ஜாகரம்.




அநாதி காலமாகவே ஸம்ஸாரமென்ற நித்திரையில் உறங்கியவண்ணம் இருக்கும் சேதனர்களுக்கு அஸ்தமனமேயில்லாத சூரியனாகவே ஆகிறாய். அன்றியும் மறுபடியும் தூக்கம் -மறுபடியும் விழித்தல் என்ற நிலையில்லாமல் எற்றைக்கும் விழிப்பேயான மோக்ஷத்தை அளிப்பவன் நீயே.(பரம வியோம பாஸ்கர:)




63. த்வதேக சரணாநாம் த்வம் சரணாகத ஜீவந;


விபதம் ந: க்ஷிப க்ஷிப்ரம் தமிஸ்ராமிவ பாஸ்கர:




சரணாகதர்கள் உம்மையே ஜீவனமாக கொண்டவர்கள். நாங்கள் உம்மையன்றி ஒருவரையும் ஆச்ரயிக்காதவர்கள். எங்களுடைய ஆபத்தை சீக்கிரமே தொலைக்கவேண்டும். சூரியன் வந்தவுடனே இருள் மாள்வது போல் எமது ஆபத்துக்களும் அழிய வேண்டும்.




64. ஸதி ஸூர்யே ஸமுத்யந்த: ப்ரதிஸூர்யா இவாஸுரா:


ஜகத் பாதாய ஜாயந்தே ஜஹி தாந் ஸ்வேந தேஜஸா!!






ஸூர்யன் இருக்கும்போதே உலகில் ப்ரதி சூர்யர்களாய் அசுரர்கள் தோன்றுகின்றனர். அவர்கள் உலகை அல்லல்படுத்துகின்றனர். நீ உனது பராக்கிரமத்தாலேயே அவர்களை தொலைக்கவேண்டும்.ஒரு தேஜஸினால் அந்த போலியான பிரதி சூரியர்கள் ஒழிய வேண்டும். (ப்ரதி சூர்யர்கள் என்பது சூர்யமண்டலத்தைச் சுற்றி ஒரு குறி ஏற்படுவதாகும். ப்ரதி சூர்யர்கள் ஏற்பட்டால் திருட்டுபயம்,ஒருவிதமான குமுறல், ஆந்தரமான பயம், அரசனுக்கு கெடுதி என்று ப்ருஹத் ஸ்ம்ஹிதை கூறுகிறது).




65. ஸ தைத்யஹத்யாம் இச்சத்பி: ஸுரைரேவமபிஷ்டுத:


அநந்யத்ருச்ய: ஸஹஸா தயயா தர்சநம் ததௌ!!




இப்படியாக எம்பெருமான்,அஸுரர்களை அழிக்க விரும்புகின்ற தேவர் குழாங்களாலே துதிக்கப் பெற்றான்.தம்மைச் சேர்ந்தவரன்றி பிறர் கண்களுக்குப் புலனாகாத அவன் தயையினால் உடனே சேவை சாதித்தான்.




66. ததஸ்தம் தத்ருசுர் தேவா: சேஷபர்யங்கமாஸ்த்திதம்!! அதிரூடசரந்மேகம் அந்யாத்ருசம் இவாம்புதம்!!




சேஷபர்யங்கத்தில் திருவணையில் எழுந்தருளியிருக்கும் அவனை தேவர்கள்அனைவரும் ஸேவித்தனர்.திரை திறந்தவுடன் எவ்வாறு எல்லோருடைய பார்வையும் எம்பெருமான் ஒருவனையே நோக்குமோ அவ்வாறே அவனைஸேவித்தனர். இது மேகமோ? காரொத்ததோ? கடலொத்ததோ? ஆழியில் கிடக்கும் ஊழிமுதல்வனே! அவன் கீழ் ஒரு வெளுத்த மேகம். சரத்காலத்தில்பேய்ந்து ஓய்ந்து லேசாக வானவீதியில் சஞ்சரிக்கும் பூ போன்ற வெளுத்த மேகம். அதன் மேல் வர்ஷித்த கார்மேகம் போல் பெருமான் வீற்றிருந்தான்.




67. பத்ந்யா ஸஹ நிஷேதுஷ்யா பத்மலக்ஷணலக்ஷ்யயா!


ஸவேச்சயைவ சரீரிண்யா ஸூசிதைச்வர்ஸம்பதம்!!


சேஷ பர்யங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் தனது அருகில் அமர்ந்திருக்கும் பத்னியால் மிகுந்த செல்வம் உடையவனாக தோற்றுவிக்கப்படுகிறான் . கறுப்பான மேகம். மேகத்தின் மெருகு மின்னல்!மேகம் எவ்வளவுக்கெவ்வளவு கறுப்போ அதில் அத்தனைக்கத்தனை மின்னலின் அழுத்தம் உண்டு. திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் திருப்பள்ளியில் திருமாலின் திருமேனியுடன் எத்தகைய சேவை! பெருமாளுக்கு அடையாளம் பிராட்டியானால், பிராட்டிக்கு அடையாளம் சொல்ல வேண்டாமா? ஆகவேதான் பத்ம லக்ஷண லக்ஷ்யயா என்கிறார்.



68. ஸுகுமார ஸுகஸ்பர்ச ஸுகந்திபிர் அலங்க்ருதம்


ஸ்வ விக்ரஹகுணாராம ப்ரஸுநைரிவ பூஷணை:




திருமேனியாகிற ஒரு அழகான பூங்காவில் பூத்துக் குலுங்கும் பூக்கள் இவை என்று சொல்லும்வண்ணம் அமைந்திருப்பவை திருவாபரணங்கள். நவரத்னகசிதமானவை. கண்களைக் கவரும் வண்ணம் ஸுகுமாரமாய் இருப்பவை.உறுத்தக் கூடியவை போலன்றி ஸுகஸ்பர்சமாய் அமைந்தவை. அன்றியும் அவை ஸுகந்திகள். ஸுவர்ண புஷ்பமாய் மட்டுமன்றி அவைகளில் நறுமணமும் உண்டு போலும்.




69. ஆரஞ்சித ஜகந்நேத்ரை: அந்யோந்யபரிகைமிதை:


அங்கைரமித ஸௌந்தர்யை: அநுகல்பித பூஷணம்!!




திருவாபரணப் பொலிவினை முன் ஸ்லோகத்தில் சாதித்தார்.இதில் திருமேனியின் ஸௌந்தர்யத்தை அனுபவிக்கிறார். முதலில் திருவாபரணங்களில் தான் பார்வை சென்றது. பின் அவை அமர்ந்திருக்கும் திருமேனியில் அழுந்தியது. உலகில் உள்ள கண்கள் கோடியும் கண்டால் எப்படி இருக்குமோ அப்படி குதூகலித்தது. தோள் கண்டார் தோளே கண்டார் முடிவினைக்கண்டார் யாரே என்ற வாக்கினை போல் அவயங்களின் அமைப்பும்,இணைப்பும் அம்மம்மா! ஆபரணங்கள் இந்த ஸ்வாபாவிக அழகின் முன் எம்மாத்திரம்.




70. உத்தேஜித ஜயோத்ஸாஹம் ஆயுதைர் அநகோத்யமை:


ஸௌர்ய விக்ரம சக்த்யாத்யை: ஸஹஜை: ஸ்வகுணைரிவ!!




திவ்யாயுதங்களோடு ஸேவை சாதிக்கிறான் எம்பெருமான். அவை சுறுசுறுப்போடு எம்பெருமானுக்கு உத்சாகத்தை உண்டு பண்ணுகின்றன. வெற்றிக்காகத் துண்டுகின்றன. அவை எம்பெருமானுடைய சஹஜமான ஸௌர்யம்,விக்ரமம்,சக்தி முதலிய குணங்களாகும். அவை தூய்மையானவை. ஆயுதங்கள்,குணங்கள் இரண்டுமே ஜயோத்ஸாகத்தை உண்டு பண்ணுகின்றன.




71. ஸ்வகாந்தி ஜலதேரந்தஸ் ஸித்த ஸம்ஹநநம் ஸ்வத:


மஹிம்நா ஜாதவை சித்ர்யம் மஹாநீலம் இவோதிதம்.!!




இவன் சயனித்திருப்பது வெண்நிறக்கடலில். அவன் சயனித்திருக்கும் அனந்தனும் வெளுப்பு. அவன் திருமேனியின் நிறமோ கருப்பு. திவ்யாபரணங்களின் காந்தியும், திருவின் நிறமும் ஸ்வர்ணமயம். இந்த காந்தி கடல் போன்றது. இந்த காந்தி மண்டலத்திற்குள் அழகான திருமேனிப்பொலிவு. தானாகவே அமைந்த திருமேனிப்பொலிவு. தனது தனிப்பட்ட மஹிமையினாலேயே தோன்றிய திருமேனி. அவயங்களின் அமைப்புகள் தானாகவே ஸுந்தரமானவை. இத்திருமேனி மஹாநீலமணியை ஒத்தது. அதுவும் சமுத்திரத்திலிருந்து தானாகவே உண்டாகும் நீலமணியை ஒத்தது.




72. ச்ருதி ரூபேண வாஹேந சேஷ கங்கண சோபிநா!


ஸ்வாங்க்ரி ஸௌரப திக்தேந தத்த ஸங்க்ராமதோஹளம்!!




ஒரு சிலரை பார்த்தவுடன் ஒரு சிலருக்கு ஒரு வேகம் உண்டாவது வழக்கம் அனந்தன்,கருடன்,விஷ்வக்ஸேனர் ஆகியோர்,நித்யஸூரிகள்,ஸ்வஸ்வகார்ய துரந்தரர்கள். இதில் கருத்மான் திவ்யமான ஸ்தானத்தை வகிக்கிறார். அவர் அருகில் இருந்தாலே எல்லாருக்கும் அளவிடமுடியாத உத்ஸாகம் ஏற்படும். ஏனெனில் பெருமான் ப்ரயாணத்திற்கு சித்தமாயிருக்கிறார். இனி அஸுர பயமில்லை என்ற திடமான நம்பிக்கையூட்டுவதாக இருக்கும். அவரின் பெருமையை சொல்லத்தான் வேண்டும். சேஷனை கையில் கங்கணமாகச் சுற்றிக்கொண்டிருப்பவர். அதுவும் அவரின் திருமேனியை மினுமினுக்கச் செய்கிறது. அவரின் திருமேனியில் தனித்ததொரு பரிமளம் வீசுகிறது. அது ச்ருதி பரிமளமோ? இந்த மணம் வேறெங்கும் கிடையாதே? எம்பெருமானின் திருவடிகளை அவர் தன் கைகளில் ஏந்துகிறார். வேதமணம் கமழும் அவர்தம் திருவடிகளை தாங்கியதால் தான் இவரின் மேலும் அந்நறுமணம் கமழ்கிறது போலும். பெருமாள் திருவடியில் தோய்ந்து மணம் பூசியதால்தான் இவர் பெரிய திருவடியானார் போலும்!




73. ஸ்வவேத்ர ஸ்பந்த நிஸ்பந்த நேதவ்யேந நிவேதிதம்!


பக்தி நம்ரேண ஸேநாந்யா ப்ரதிச்ருண்வந்தம் இங்கிதை:




விஷ்வக்ஸேனர் எழுந்தருளியிருக்கிறார். அவர் தனது பிரம்பின் அசைவினால் ப்ரவேசிக்கின்ற தேவர்களை அசைவற்றவர்களாக்கி விடுகின்றார். அவர் நிவேதனம் செய்வார். நிவேதனம் செய்கின்றபோது விரைத்து முறைத்து நிர்காமல் உடல் முழுவது எப்படித்தான் நிற்கிறது. இதற்கு காரணம் பயம்ல்ல. பக்தியே! இத்தகைய விஷ்வக்ஸேநர் செய்யும் விஞ்ஞாபனத்தை தமது இங்கிதங்களால் ஏற்றுக்கொள்ளும் பொலிவுடன் சேவை சாதிக்கும் எம்பெருமானை தேவர்கள் சேவித்தனர்.




74. அநபாயம் தம் ஆதித்யம் அக்ஷயம் தாரகாதிபம்!


அபாரம் அம்ருதாம்போதிம் அமந்யந்த திவௌகஸ:




தேவர்கள் பெருமானை பலவாறு சேவித்தனர். அவன் அஸ்தமனமே இல்லாத சூர்யன். ராகு கேது க்ரஹணாபாயம் அற்றவன். ஆகவே அதிஸய சூர்யனாக ஸேவித்தனர். க்ஷயமே இல்லாத சந்திரன். கரையேயில்லாத அமுதக்கடல். இவ்வாறு யார் யாருக்கு எவ்விதம் ஸேவிக்கத் தோன்றியதோ அவ்விதம் ஸேவித்தனர். அநபாயம்,அக்ஷயம்,அபாரம் என்கிற மூன்று விசேஷங்களும் அத்புதம்!




75. அபயோதார ஹஸ்தக்ரம் அநகஸ்வாகதஸ்மிதம்!


அவேக்ஷ்ய விபுதா தேவம் அலபந்த த்ருசோ: பலம்!!




திருக்கரம் அபயமளிக்கும் பொலிவுடனும் ஔதார்யத்துடனும் விளங்குகிறது. பார்த்த மாத்திரத்திலேயே பாபங்களைத் தொலைக்கும் தூயதான புன்முறுவலுடன் கூடிய திருமுக மண்டலம். இத்தகைய பெருமைகளையுடைய எம்பெருமானை சேவித்து கண்கள் பெற்றதன் பயனை அடைந்தனர் தேவர்கள்!.




76. தஸ்மை விக்ஞாபயாமாஸு: விதிதார்த்தாய நாகிந:


நிஹதாசேஷ தைத்யாய நிதாநம் ஸ்வாகதே:புந:




எம்பெருமானுக்கு புலனாகாத விஷயம் என்று ஒன்றில்லை. ஆயினும் நமது ஸ்வரூபம் நாம் இதற்காக வந்திருக்கிறோம் என்று விண்ணப்பம் செய்ய வேண்டும். எல்லாம் அறிந்த பெருமானிடம் எல்லாம் அவன் அறிந்ததே என்று தெரிந்தும் விண்ணப்பிக்கின்றனர். இதற்கு முன்னமே அவன் அவதரித்து பல அஸுரர்களை அழித்தவன். இப்போது நாகலோகவாசிகள் அனைவரும் திரண்டு வந்து தாங்கள் வந்த காரணத்தை விளக்கலாயினர். (அசேஷ தைத்யாய என்பதற்கு அசுரர்கள் அத்தனை பேரையும் அழித்தவன் என்று பொருள். )




77. த இமே க்ஷத்ரியா பூத்வா க்ஷோபயந்தி க்ஷமாமிமாம்!


தவ தேஜஸி யைர் நாத தநுஜை: சலபாயிதம்!!




நாதனே! உமது தேஜஸ்ஸில் முன்பு விட்டில் பூச்சிகளாக விழுந்து மாண்ட அத்தனை அசுரர்களும் இப்பொழுது பூமியில் அசுரர்களாக பிறந்து இந்த பூமியை படாதபாடு படுத்தி வருகின்றனர்.




78. சதுர்ணாம் புருஷார்த்தாநாம் ப்ரஸவோ யத்ஸமாச்ரயாத்!


ஹவ்ய கவ்ய ப்ரஸூரேஷா தீர்யதே தைத்யபாரத:




தர்மம், அர்த்தம்,காமம்,மோக்ஷம் என்று புருஷார்த்தங்கள் நான்கு. இவை நான்கும் உண்டாவது பூமியை ஆச்ரயித்தால்தானே உண்டாகும். யாக யக்ஞங்கள் மனிதர்களால் தானே செய்யப்படவேண்டும். அவர்களுக்கு ஆச்ரயமளிப்பவள் பூமி. புருஷார்த்தங்களையும் ப்ரஸவிப்பவள் அவளே. பித்ருக்களின் ஆராதனத்திற்கும்,வேள்விக்கு வேண்டியதையும் அவள் தானே அளிக்கிறாள். யாக யக்ஞ ச்ரார்த்தாதிகள் இல்லை என்றால் ஸர்வலோக க்ஷோபம் ஏற்படும். இவளுக்கு கஷ்டம் ஏற்பட்டால் என்ன ஆவது.” அஸுரர்கள் இதை அறிந்துவிட்டபடியால் அவளைச் சிதற அடிக்கின்றனர். அஸுரர்கள்தான் பூமிக்கு பாரமானவர்கள். எல்லாம் தாங்கும் இயல்புடையவள் ஆயினும் பாரம் சுமக்க முடியாமல் அவதிப்படுகிறாள்.




79. ஜாதா நிகில வேதாநாம் உத்தமாங்கோபதாநத:


த்வத்பாத கமலாதேஷா த்வதேகாதீநதாரணா!!




உமது திருவடியில் பிறந்தவள்தானே பூமி. பத்ப்யாம் பூமி: என்று புருஷஸூக்தம் பேசுகிறது. நீர்தானே இவளை தரிக்கவேண்டும். உன் திருவடி தாமரையை ஒத்து எவ்வளவு மிருதுவாக இருக்கிறது! அந்த மெல்லிய இடத்தில் இருந்து தோன்றியவளன்றோ! அத்திருவடியையும் வேதங்கள் தமது சிரஸ்ஸில் தாங்குகின்றன. மேலும் வேதங்களுக்கு தலையணையன்றோ உமது திருவடி. அத்திருவடியை அடைந்தவர்களை காப்பது உமது தர்மம் அன்றோ! ஆதலால் இவள் உம்மாலேயே காப்பாற்றப்பட்டு நிலைக்க வேண்டியவள் என்று பிரார்த்தித்தனர்.




80. யதி ந த்வரதே நாத பாரவ்யபநயே பவாந்!


ப்லாவயிஷ்யந்த்யுதந்வந்த: ப்ருதிவீம் ப்ருதுவீசயே!!




த்விரை என்றால் வேகம். எம்பெருமானே நீர் த்வரிக்க வேண்டும். பூமியிம் பாரம் விரைவில் இறங்க வேண்டும். பத்னியின் பாரத்தை பதிதானே போக்கவேண்டும். ஆகவே அவளை ரக்ஷிக்காது விட்டுவிட்டால் , அவள் மூழ்கிப் போவது திண்ணம். கடல்கள் எல்லாம் பொங்கி எழுந்து கொந்தளித்து பேரலைகள் மோத அவள் இருக்குமிடம் தெரியாமல் மூழ்கடிக்கபடப் போகிறாள்.




81. கருணாதீநசித்தேந கர்ணதாரவதீ த்வயா


மாவஸீதது ப்ருத்வீயம் மஹதீ நௌரிவாம்பஸி




நீயோ கருணையுள்ளம் படைத்தவன். தயைக்கு அதீனமானவன். இந்த பூமி பெருங்கப்பலாகத் திகழ்கிறாள். படகோட்டியில்லாத கப்பல்தான் மூழ்கிவிடும். நீ பெரும் படகோட்டி. இந்த பூமியாகிற பெரும் படகு தவிக்கலாகாது. (கர்ணதாரன் என்றால் இவ்விடத்தில் படகோட்டி). சிறு கப்பலானால் சேதம் குறைவு. மஹத்தான கப்பலானால் சேதம் மதிப்பிடவே முடியாது. இத்தகைய ஆபத்திலிருந்து பூமி துயரப்படாமல் நீதான் காப்பாற்றவேண்டும்.




82. ரசநா ரத்ந ரூபேண பயோதி ரசநா த்வயா!


ப்ரசாந்த தநுஜக்லேசா பரிஷ்கரணம் அர்ஹதி!!




இவள் ஸமுத்திரங்களையே ஒட்டியாணமாகக் கொண்டவள்.(ரநா என்பதற்கு ஒட்டியாணம் என்றும் ஆபரணம் என்றும் பொருள். இதை காஞ்சீ என்றும் கூறுவர்). ஒட்டியாணத்தில் ரத்தினங்களுக்கு குறைவில்லை. ஆனால் அவை ஒன்றும் தென்படுவதில்லை. அதில் நடுநாயகமாக மணியொன்றிருக்கும். அது நீர்தான், நீர்தான் அதில் பதிக்கப்பெற்ற நடுநாயக நீலமணியாகத் திகழ்கிறீர். ஆனால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். விம்முகிறாள். அவளுடைய கிலேசம் தொலைய வேண்டுமானால் அஸுரர்கள் அழிந்தாக வேண்டும். ஆதலால் தேவரீர் அவளை அழகுறச் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.




83. கம்ஸப்ரப்ருதிபிஸ்ஸேயம் சல்யைரிவ ஸமுத்த்ருதை:


சிரம் பவது தே ப்ருத்வீ சேஷமூர்த்தே: சிகண்டக:




கம்ஸன் முதலானவர்கள் பூமியில் தைக்கும் முட்கள் போன்றவர்கள். அவற்றைப் பிடுங்கித்தான் ஆகவேண்டும். அவர்கள் அழிந்தால் அவள் பாரம் நீங்கி லேசாக ஆகிவிடுவாள் சேஷிரூபியாயிருந்து நீ அவளைத் தலையில் தாங்குகிறாய் ( சேஷாத்மநா து பவதீம் சிரஸா ததாதி-ஸ்ரீ பூஸ்துதி) . சிகண்டகம் என்பது சிகையில் ஒரு பகுதியை எடுத்து அலங்காரமாக ஒரு முடிச்சாகப் போடுவது. அது தலைக்கு பாரமாவதில்லை. அதுபோல் இந்த பூமியும் உமது சிரஸ்ஸில் நீடூழிகாலம் பாங்காகத் திகழவேண்டும்.




84. ப்ரபோத ஸுபகை: ஸ்மேரை: ப்ரஸந்நை: சீதலைஸ்ச ந:


கடாக்ஷை: ப்லாவய க்ஷிப்ரம் க்ருபைகோதந்வத் ஊர்மிபி:




நீ கடாக்ஷிக்க வேண்டும். உனது கடாக்ஷங்களுக்குத்தான் எவ்வளவு பெருமை! நீ விரைந்து கடாக்ஷித்தருளவேண்டும். கடாக்ஷத்தினால் நனைத்தருள வேண்டும். பள்ளியெழுந்தருளும்போது கண்மலர்கின்ற அழகினை யாரே அளக்க இயலும். கள்ள நித்திரை செய்தாலும் விழித்தெழுவது பரம் போக்யமாயிருக்கும். மேலும் அவற்றின் பெருமைகள் கூறப்படுகின்றன. ஸ்மேரை:- புன்முறுவல் செய்கின்றன. தெளிவாக இருக்கின்றன. அனுக்கிரஹம் செய்கின்றன. சில்லென்று இருக்கின்றன. மேலும் கருணையென்னும் கடலின் அலைகள் போலிருக்கின்றன. அத்தகைய கடாக்ஷங்களாலே நீ எங்களை நனைத்தருள வேண்டும்.




85. த்வயி ந்யஸ்தபராணாம் ந: த்வமேவதாம் க்ஷந்தும் அர்ஹஸி! விதிதாசேஷவேத்யஸ்ய விக்ஞாபந விடம்பநாம்.!!




நாங்கள் யார்? உன்னைச் சேர்ந்தவர்கள். உன்னிடம் பரஸமர்ப்பணம் பண்ணியவர்கள். ரக்ஷிக்கப்பட வேண்டியவர்கள். யோகக்ஷேமம் வஹாம்யஹம் என்று சொன்னவன் நீ. யாருக்கு எப்போது எது செய்ய வேண்டும் என்பதை நன்றாகவே அறிந்தவன் நீ! இதில் நாங்கள் சொல்ல வேண்டியதென்று ஒன்றுமேயில்லை. விண்ணப்பம் செய்வது எங்களின் பகட்டான பதட்டமான செயல். இதை மன்னித்தருள வேண்டும்.




86. இத்தம் வததி தேவாநாம் ஸமாஜே வேதஸா ஸஹ!


வவந்தே ப்ருதிவீ தேவம் விநத த்ராண தீக்ஷிதம்!!




இவ்வாறு தேவர்களின் கூட்டமானது பிரமனுடன் சேர்ந்து முறையிட்டது. அப்பொழுது ப்ருத்வீயானவள் தேவனை வணங்கினாள். அவரும் வணங்கியவர்களை ரக்ஷிப்பதிலே திக்ஷையுடையவ்ன் ஆயிற்றே!




87. தநுமத்யா விசாலாக்ஷீ தந்வீ பீநபயோதரா


மாயேவ மஹதீ தஸ்ய வநிதாரத்ந ரூபிணீ!!




பூமிதான் எவ்வளவு அழகாக இருக்கிறாள். மெல்லிய இடை. விசாலமான அகன்ற கண்கள். ஒல்லியான வடிவு. பருத்த திருமுலைத்தடங்கள். (தந்வீ துங்கஸ்தந பரநதா- கோதாஸ்துதி). பெரியதொரு மாயை போன்று தோற்றமளிக்கிறாள். அவனே பெரிய மாயன். அவனை சேர்ந்தவளன்றோ! வநிதாரத்னமாகத்தானே அவனின் மாயை தோற்றமளிக்கிறாள். அதிசயம்! மங்கையர் திலகம். பெண்குலத்துக்கே ரத்னம் போல் திகழ்கிறாள்.




88. ஆபத்தமண்டலைர் ப்ருங்கை: அலகாமோத மோஹிதை: அயத்நலப்தாம் பிப்ராணா மாயூரச்சத்ர ஸம்பதம்!!




அவள் குனிந்து ஸேவிக்கின்றாள். அப்படி குனிந்து எழுந்திருக்கும்நிலையில் ஒரு அனுபவம். கந்தவதீ ப்ருத்வீ என்பது போல் அவளுக்கு ஸ்வாபாவிகமான நறுமணம் உண்டு. அவளுடைய முன்னுச்சி மயிர்களில் ஒரு வாசனை. (மௌளி கந்த ஸுபகாம்-கோதாஸ்துதி) . அவற்றால் ஈர்க்கப்படுகின்றன வண்டினங்கள். அவற்றில் பல கோஷ்டிகள். இது பூமியின் சிரஸ்ஸில் உள்ள மலர்களின் மணமோ அல்லது அலக மணமோ என்று! அவை மொய்க்கின்றன. அதனால் பல மண்டலங்கள்(வட்டங்கள்). ஆகவே அவளின் முயற்சியின்றியே அவள் தலையில் மயில்கண் குடை அமைந்துவிட்டதாம்.




89. ப்ரியஸந்தர்சநாநந்த ஜநிதைர் அச்ரு பிந்துபி:


ந்யஸ்த மௌக்திக நைபத்யை: பரிஷ்க்ருதபயோதரா!!




கணவனைக் கண்ட மகிழ்ச்சிதான் என்னே! அவை கண்ணீர்த்துளிகளாக உதிர்கின்றன. அவை முத்துக்களாய் திருமார்பில் படிகின்றன. அன்றியும் அவள் மார்பகத்திற்கு ஒரு முத்தாடையாக திகழ்கிறது. திருமார்பகமும் எவ்வளவு பரிஷ்காரமாக இருக்கிறது.




90.ப்ரஸ்புரந்தம் ப்ரியஸ்யேவ பரிரம்பாபிலாஷிணம்


தக்ஷிணாதிதரம் பாஹும் தக்ஷிணா பஹ்வமந்யத




அழகான சகுனம். இடதுகை துடிக்கின்றது. இவள் ஸமர்த்தை. தனது ப்ரியனின் கரம் துடிப்பதை கண்டாள். தனக்கும் அதே நிலைதானே. இதற்கு பலம் பர்த்தாவின் அணைத்தல்தானே. இத்துடிப்பினால் அவளுக்கு ப்ரியனிடத்தில் போலே தனது இடது கையிலும் பஹுமானம் ஏற்பட்டுவிட்டது.




91. விபதஞ் ச ஜகாதைஷா விபஞ்சீமதுரஸ்வநா


விலக்ஷ ஸ்மிதஸம்பிந்ந மௌக்திகாதர வித்ருமா




இவளுடைய குரலில்தான் என்னே அழகு! விபஞ்சி-வீணாநாதம் போன்ற குரல். யாழின் இசையொத்த இனிய குரலுடன் விண்ணப்பம் செய்கின்றாள். அப்போது அவளுக்கு ஏற்பட்டது விலக்ஷ ஸ்மிதம்- ஆச்சர்யத்துடம் கூடிய அல்லது வெட்கத்துடன் கூடிய சிரிப்பு எனக் கொள்ளலாம். அதோடு இணைந்தது உதட்டின் சோபை. அது பவளம் போன்றது. ”சாருததீ” . பல்வரிசை முத்துக்கள் கோர்த்தன போல் அமைந்தது போல் அந்த சோபைக்கு அந்தமேயில்லை. புன்முறுவல்,துல்லியமான தெரிந்தும் தெரியாததுமான பல்வரிசை,பவளப் பொலிவுடன் உதடு,அத்தகைய வாயில் உண்டாகும் திவ்யமான ஒலி. அத்தகைய திவ்ய சௌந்தர்யத்துடன் தனக்கு ஏற்பட்டிருக்கும் விபத்தைக் கூறலானாள்.




92. அத தாந் பவ்யயா வாசா பகவாந் ப்ரத்யபாஷத


ப்ரதிச்ருத்ப்ராப்த நிர்ஹ்ராத பாஞ்சஜந்யாபிநந்த்யயா




பிறகு எம்பெருமாள் க்ஷேமகரமான வார்த்தையால் அத்தேவர்களுக்கும் தன் தேவிக்குமாக பதில் அளித்தான். அவன் வார்த்தை அருகில் திருக்கரத்தில் குடியேறி வீற்றிருக்கும் சங்கினில் புகுந்து அச்சங்கும் ஆம் ஆம் என்று ஆமோதிப்பது போன்றே கம்பீரமாயிருந்தது.




93. மாபைஷுர் அஸுராநீகாத் பவந்தோ மதுபாச்ரயா:


மதாக்ஞாம் அநவக்ஞாது: பரிபூத்யா ந பூயதே




நீங்கள் அனைவரும் என்னைச் சேர்ந்தவர்கள் (மாபைஷு) . ப்ரபன்னர்களுக்கு பயமேன். என்னை மதிப்பவனுக்கு பரிபவம் ஏற்படாது. எனது கட்டளையை மீறுபவன் யாராயிருந்தாலும் அவன் எனக்குத் துரோஹி. அவன் நிம்மதி அடையமாட்டான். ஆக்ஞயை பரிபாலனம் பண்ணிவருகிற உங்களுக்கு பயமேன்?






94. அவதார்ய புவோபாரம் அவதாரோ மமாமரா:


அநாதி நிதநம் தர்மம் அக்ஷதம் ஸ்தாபயிஷ்யதி




அவதாரம் என்ற சொல்லின் பொருளை விளக்கும் ஸ்லோகம். அவதாரம் என்றால் இறங்கி வருதல். நான் இறங்குவது இறக்கிவைக்கவும் ஏற்றி வைக்கவுமே! பூமியினுடைய பாரம் இனி இறங்கிவிடும். அன்றியும் ஆதி அந்தமில்லாத தர்மத்தை நலிவுபெறாமல் என் அவதாரம் செய்துவிடப்போகிறது.




95. யாவதிஷ்டபுஜோ யாவத் அதிகாரம் அவஸ்த்திதா:


பரிபாலயத ஸ்வாநி பதாநி விகதாபத:




உங்களுக்கு இனி ஆபத்துக்கள் இல்லை. தங்கள் தங்கள் ஸ்தானத்தில் இருந்து பரிபாலனம் பண்ணுங்கள். உங்களில் யார் யார் எவ்வளவு யாக யக்ஞங்கள் பண்ணியிருக்கிறீர்களோ அதற்கேற்றவாறு பலனை அனுபவியுங்கள். மேலும் யார் யாருக்கு என்ன என்ன அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளதோ அதற்கேற்றவாறு நடந்து கொண்டு ஆட்சி செலுத்தி வாருங்கள்.




96. தமநாத் தநுஜேந்த்ராணாம் த்ரக்ஷ்யத த்ரிதசாரிபா:


பூயோபி லகுதாம் ப்ராப்தாம் புவமுல்லாகிதாமிவ




தநுஜர்களின் (அசுரர்கள்) தலைவர்களை நான் அழித்து விடுகிறேன். தேவர்களின் அதிபர்களாக இருக்கும் நீங்கள் பூமியின் பாரம் குறைந்து லேசாக இருக்கப்போவதையும் வியாதியிலிருந்து விடுபட்ட மங்கை போல் இப்பூமி ஆகப்போவதையும் காணப்போகிறீர்கள். (தமநம் என்றால் அடக்குதல்,அல்லது அழித்தல்) த்ரிதசாதிபர்கள் என்று ப்ரமன் முதலியோரைக் குறிப்பதும் தநுஜேந்திரர்கள் என்று கம்சன் முதலானோரைக் குறிப்பதும் என்பதாக ஸ்வாமி குறிப்பிடுகிறார்.




97. தைதேய ம்ருகஸங்காதே ம்ருகயாரஸபாகிபி:


பவத்பிரபி மேதிந்யாம் பவிதவ்யம் நராதிபை:




அஸுரர்களை மிருகங்களுக்கு சம்மாக பாவிக்கிறார். ஸங்காதம் என்பதற்கு கூட்டம் என்பதோடு அழித்தல் என்றும் பொருள். ம்ருகயா ரஸம் என்பது வேட்டையாடுபவர்களுக்குத்தான் விளங்கும். அந்த ரஸத்தில் நீங்களும் பங்கு பெற வேண்டாமா? நீங்களும் மேதினிக்கு பரிந்தபடியால் பூமியில் பிறக்க வேண்டும். வேட்டை என்பது விளையாட்டு. நான் அவர்களை அழிக்கப்போவதும் விளையாட்டே! இதில் எந்த ச்ரமமும் இல்லை. இருப்பினும் அவ்வேட்டையில் நீங்களும் பங்கு கொண்டால் அநத ரசானுபாவத்தை அடையலாம். த்ரிதசாதிபர்களே என்று யோசிக்க வேண்டாம். அங்கும் நராதிபர்களாகத் தோன்றி இதில் பங்கு கொள்ளுங்கள்.




98. இதி தாந் அநகாதேச: ஸமாதிச்ய ஜநார்தந:


அவதீரித துக்தாப்தி: மதுராயாம் மநோ ததே




இவ்வாறு ஜநார்த்தனன் தூயதான கட்டளையை பிறப்பித்து அவர்களுக்கு உத்தரவிட்டு அடுத்தகணமே திருப்பாற்கடலில் ஆசையற்று, மதுரையில் பிறக்க மனதை வைத்துவிட்டான். ஜநார்த்தனன் என்ற திருநாமம் மிகவும் அழகானது. ஜனங்களை பீடிப்பவன் என்று பொருள். இச்சப்தத்தை கீதையில் அனுபவித்தல் அழகு.




99. ஆச்வாஸ்ய வாகம்ருதவ்ருஷ்டிபி: ஆதிதேயாந்


தைதேய பார நமிதாம் ப்ருதிவீஞ்ச தேவீம்


ப்ராதுர்புபூஷுரநகோ வஸுதேவ பத்ந்யாம்


பத்மாபதி: ப்ரணிததே ஸமயம் தயாயா:




இவ்வாறு தேவர் குழாம்களைத் தனது அமுதம் பொழியும் வாக்குகளால் ஸமாதானப்படுத்தி, அஸுரர்களின் பாரத்தினால் கூனியிருக்கும் பூமாதேவியையும் ஆச்வாஸப்படுத்தி வஸுதேவ பத்னியிடம் பிறக்கத் திருவுள்ளம் கொண்டு ச்ரியப்பதியான எம்பெருமான் தயையின் சங்கேதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.




100. ஸாதூநாம் ஸ்வபதஸரோஜ ஷட்பதாநாம்


தர்மஸ்ய ஸ்திதிம் அநகாம் விதாது காம:


யத்கர்ப்பே ஜகதகிலம் ஸ ஏவ கர்ப:


தேவக்யாஸ் ஸமஜநி தேவதேவவந்த்ய:




தனது திருவடித் தாமரைகளில் வண்டென விளங்கும் ஸாதுக்களை ரக்ஷிக்கவும் தர்மத்தை ஸ்திரமாக நிலைக்கச் செய்யவும் எவனுடைய வயிற்றில் உலகமெலாம் அடங்கியுள்ளதோ அவனே தேவகியின் கர்ப்பமாக ஆனான். அந்த கர்ப்பம் தேவாதி தேவர்களெல்லாம் ஸேவிக்கத் தக்கதாயிற்று.




வந்தே எனத் தொடங்கிய ஸர்கம் வந்த்ய: என இனிதே நிறைவுற்றது।




கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே




ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம;




ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகாய நம: